தமிழ்மணமும் ...
தமிழ்மணத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளை விலக்கியது சரியானதா என்று பலர் தத்தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சில கருத்துக்களை சக வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இப்பதிவு!
1. ஒருவர் தன் பதிவில் முன் வைக்கும் கருத்துக்களுக்கு, சிலருக்கோ / பலருக்கோ மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவற்றை, நாகரீகமான வகையில், சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டக் களத்திலோ அல்லது தனிப்பதிவாகவோ இட மற்றவருக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால், ஒருவரைப் பற்றிய இரங்கல் பதிவையும், அதில் இடப்பட்ட பின்னூட்டங்களையும் பகடி செய்வது சரியான செயலாகத் தோன்றவில்லை. மதி தமிழ்மணத்திற்கு செய்து வரும் சேவை மற்றும் அவரது எழுத்துக்களை முன் வைத்து அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அதனால் அவரது பதிவுகள் அதிக அளவில் வாசிக்கப்பட்டும், பின்னூட்டங்கள் பெற்றும் வருகின்றன. இதில் பகடி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!
2. சில சமயங்களில், பகடியை மாற்றுக் கருத்துக்களை வெளியிட ஒரு ஆரோக்கியமான வழியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைப் பலரும் ரசிக்கவே செய்கின்றனர். அதே நேரத்தில், வலைப்பதிவுக் களத்தை பிறரை பகடி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது, பல நேரங்களில் காழ்ப்பை வளர்ப்பதற்கு மட்டுமே அடி கோலுவதாய் அமைந்து விடுகிறது.
3. காசி தமிழ்மணச் சேவையின் முதலாண்டு நிறைவின் போது இட்ட பதிவிலேயே மதத்துவேஷம் மற்றும் இன்னபிற விரும்பத்தகாத விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை விலக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த நிலைக்குத் தன்னை தள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால், தொடர்ந்து அவ்வாறே எழுதி வருபவர்கள் தங்கள் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படக் கூடிய சாத்தியம் இருந்ததை உணர்ந்திருக்க வேண்டும்.
4. பலருக்கு, பணி, குடும்பம் ஆகியவற்றுக்கே நேரம் போதாமல் இருக்கும் சூழலில், தனியொரு மனிதனாக, தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்க தமிழ்மணத்தை உருவாக்கிய காசியின் சேவை மனப்பாங்கையும், உழைப்பையும் மனதில் கொண்டாவது, இம்மாதிரி பொதுவில் அவருக்கு கசையடிகள் வழங்குவதை தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து! "நாங்கள் என்ன, தமிழ்மணத்தை உருவாக்க பொருளுதவி கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டோமா?" என்று வினாவெழுப்புவது சற்றும் சரியல்ல! பொருளுதவி கொடுத்தாலும், ஒருவர் அதில் முனைய வேண்டாமா ?
5. தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்கள், விடயத்தை பொதுவில் வைப்பதற்கு முன், தனிப்பட்ட முறையில் காசியை அணுகி, காரணங்களைக் கேட்டு, சர்ச்சைக்குரிய பதிவுகளை தாமாகவே நீக்க முன் வந்திருந்தால், பிரச்சினையை சுமுகமான முடிவுக்கு எடுத்து வந்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்ததாகவேத் தோன்றுகிறது. ஒரு விதயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பது இங்கு நடைமுறையாகவே இருந்து வருகிறது!
6. இதைத் தணிக்கை என்று எண்ணுவதை விட, சக வலைப்பதிவரின் மனம் புண்படும்படியும், தேவையற்ற சர்ச்சையை வளர்க்கும் வகையிலும் எழுதாமல் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக நினைத்தால், அனைவருக்கும் நல்லது. முக்கியமாக, சின்னவன், இணையக்குசும்பன் பதிவுகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உருவானது குறித்து இங்கே யாருக்கும் மகிழ்ச்சி இல்லை!!! பதிவுகள் விலக்கப்பட வேண்டிய காரணங்களை ஆராயும் வழிவகைகள் குறித்து என் கருத்துக்களை முன் வைப்பதை, தற்போதைய சூழலில், தவிர்க்கிறேன்!
7. இறுதியாக, தமிழ்மணம் வாயிலாகத் தான், பல சாதாரணர்களின் (என்னையும் சேர்த்து) பதிவுகள் கவனிக்கப் படுகின்றன, வாசிக்கப் படுகின்றன என்பதை பலரும் ஒப்புக் கொள்வர். ஏன், தமிழ்மணம் மூலமாகத் தான் கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு (சக வலைப்பதிவரின் ஆதரவோடு) உதவ வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் முதல் கட்டம் நிறைவேறியது!
என்றென்றும் அன்புடன்
பாலா
12 மறுமொழிகள்:
ஊதுற சங்கை ஊதுவோம்; காது இருப்பவன் கேட்கட்டும்.
தங்களுடைய வலைப்பூ தினமலரில் இடம்பெற்றிருந்ததை பார்த்தீர்களா... அம்மு.
dharumi,
nanRi !
Anony,
Thanks! Pl. give the link in DINAMALAR that points to my BLOG.
நன்றி
அன்பின் பாலா,
உங்கள் கருத்துகளோடு நான் ரொம்பவும் ஒத்துப் போகிறேன். ஆனால் நீக்குவதற்கு முன் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கலாம். இது பலர் தாமாகவே திருந்திக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்.
பாலா,
உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.ஆதரிக்கிறேன்.
anurag, மூர்த்தி, ஜோ,
நன்றி !
நன்றி, பாலா.
காசி!
தெரியாமல் தான் கேட்கிறேன். 2005 அக்டோபரில் போடப்பட்ட பதிவுக்கு இப்போது ஏன் நன்றி? ...... Edited .......
(Rajesh)
ராஜேஷ்,
காசியை நீங்கள் கேள்வி கேளுங்கள், தப்பில்லை. அதே நேரம், சர்ச்சைக்குரிய (தனி மனித தாக்குதலாக இல்லாதபோதும்!) ஒரு வரியை நீக்கியதற்கு மன்னிக்கவும் !
எ.அ.பாலா
//தெரியாமல் தான் கேட்கிறேன்.//
தெரியாட்டித்தான் கேக்கணும். தெரிஞ்சுட்டே கேட்டா அதுக்குப்பேர் வேற :-)
//இப்போது ஏன் நன்றி?//
அப்ப சொல்லலைன்னா எப்பவும் சொல்லக்கூடாதா? இப்ப சொன்னா என்ன தப்பு? இதையெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்கவந்துட்டீங்களே, பெரீவரே.
Post a Comment